மக்களால் மக்களுக்கான கட்சி

இந்தக் கட்சியின் நோக்கத்தையும், கொள்கையையும் சமூக ஊடகங்களின் ஊடாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கிராமங்கள் அனைத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும். 

  • கிராம கிளை

இக்கட்சி ஒவ்வொரு தமிழ் கிராம சேவகர் பிரிவிலும் ஒரு கிராம கிளையை கொண்டிருக்கும். இந்த பொறிமுறையில் நம்பிக்கை கொண்ட ஒருவர் தொடர்பாளராக செயற்பட்டு, இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கக் கூடியவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளுவார். இந்த அடிப்படை உறுப்பினர்கள் ஒன்று கூடி தமது கிராம கிளைக்கான 11 பேர் (வெவ்வேறு குடும்பங்களில் இருந்து) கொண்ட செயற்குழுவை தெரிவு செய்வர். இந்த செயற்குழுக்கள் ஒவ்வொன்றும் தமது பிரதிநிதிகளாக இருவரை அவர்களது பிரதேச பொதுக்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்வார்கள்.

அடிப்படை உறுப்பினர்களே கட்சியின் பதவியாளர்களை தெரிவு செய்யும் உரிமை இருப்பதால் அவர்கள் கட்சிக்கு வருட சந்தா (1000 ரூபா) செலுத்துகிறவர்களாக இருக்க வேண்டும். இப்படியான கட்சி அமைப்பதன் முக்கியம் கருதி, ஒவ்வொரு கிராம கிளைக்கும் முதல் நூறு உறுப்பினர்களின் சந்தாவை யாரும் நன்கொடையாக தருவதற்கு முன்வரலாம்.

  • பிரதேச கிளை

இந்தக் கட்சி ஒவ்வொரு பிரதேச செயலகர் பிரிவிலும் ஒரு பிரதேச கிளையை உருவாக்கும். இந்த கிளைக்கான பொதுக்குழுவின் உறுப்பினர்கள் அந்த பிரதேசத்தின் கிராம கிளைகளின் செயற்குழுக்களினால் நியமிக்கப் பட்டவர்களாவர். ஒவ்வொரு பிரதேச பொதுக்குழுக்களும் ஒன்று கூடி அவர்களது பிரதேசங்களுக்கான 11 பேர் கொண்ட செயற்குழுவை தேர்ந்து எடுப்பர். இந்த செயற்குழுக்கள் தமது பிரதிநிதிகளாக இருவரை அவர்களது (தேர்தல்) மாவட்ட கிளைகளின் பொதுக்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்வார்கள்.

பிரதேச கிளைகள் கட்சியை பொதுமக்களிடம் தொடர்ந்து தொடர்பில் வைத்திருப்பதற்கு முக்கிய பங்கை அளிக்கும். இவற்றிற்கு உத்தியோகபூர்வமான வங்கிக் கணக்கும், முகநூல் பக்கமும் இருக்கும். உத்தியோக முகநூல் பக்கங்களின் மூலம் செயற்குழுவினர் தமது பொறுப்புகூறலை தொடர்ந்து வெளிப்படையாக நிலைநிறுத்துவர். பிரதேச செயற்குழுக்கள் தமது பிரதேசங்களுக்கு தேவையான பொதுநல திட்டங்களை தயாரித்து, அறிவித்து, நிதி சேகரித்து நிறைவேற்றும் பொறுப்பையும் கொண்டிருப்பர்.

  • தேர்தல் மாவட்ட கிளை

ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் கட்சிக்கு ஒரு மாவட்ட பொதுக்குழுவும் செயற்குழுவும் உருவாக்கப்படும். இந்த பொதுக்குழுவின் உறுப்பினர்கள் அந்த மாவட்டத்தின் பிரதேச செயற்குழுக்களினால் நியமிக்கப் பட்டவர்களாவர். ஒவ்வொரு மாவட்ட பொதுக்குழுக்களும் அவர்களது மாவட்டத்திற்கான 11 பேர் கொண்ட மாவட்ட செயற்குழுவை தேர்ந்து எடுப்பர். இந்த செயற்குழுக்கள் தமது மாவட்ட தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்சியின் மத்திய பொதுக்குழு உறுப்பினர்களை தெரிவு செய்வார்கள்.

 

  • தலைமைப் பீடம்

இக்கட்சியின் மத்திய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் மாவட்ட செயற்குழுக்களால் நியமிக்கப் பட்டவர்களாவர். பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி 11 பேர் கொண்ட மத்திய செயற்குழுவை தேர்ந்து எடுப்பர்.

 

 




Create Your Own Website With Webador