தமிழருக்கான ஏகோபித்த கட்சி

தமிழர்களின் இன்றைய அரசியல் பலவீனத்தை கருத்தில் கொண்டே சில நலன் விரும்பிகளால் இந்த வலையத்தளம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதில் தமிழ் மக்களில் மிகப் பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கைகள் விபரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் அடிப்படை உறுப்பினர்களைத் தளமாக கொண்டு எப்படி ஒரு கட்சியை உருவாக்கலாம் என்ற பொறிமுறையும் தரப்பட்டுள்ளது.

இன்று தமிழர்கள் தமது உரிமைகளில் மட்டுமின்றி வாழ்வாதாரத்திலும் பல்வேறு பிரச்சனைகளை எதிர் நோக்கி இருக்கிறார்கள். உதாரணமாக வேலை இல்லா பட்டதாரிகள், காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அபகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள், அத்து மீறிய இந்திய மீன்பிடியால் பாதிக்கப்பட்டவர்கள், மேச்சல் தரைகள் பறிக்கப்பட்டவர்கள், மற்றும் பலவிதமான வாழ்வாதார பிரச்சனை உள்ளவர்கள், தாமே தமக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் தற்போதய தமிழ்க் கட்சிகளாலோ அவற்றின் தலைமைகளினாலோ பிரயோசனமில்லை என்ற நிலையிலேயே உள்ளார்கள். ஆகவே இன்று இந்த போராட்டங்களில் நிற்பவர்கள் அனைவரும் பாடுபட்டு இந்த புதுக் கட்சியை ஆரம்பிக்க வேண்டும். 

இங்கு தரப்பட்டுள்ள பொறிமுறையின்படி கட்சியின் மத்திய குழு 28 உறுப்பினர்களை கொண்டிருக்கும். பாரம்பரியமாக தமிழ் அரசியல் கட்சிகள் சட்டத்தரணிகளையே தலைமைப்பீடத்தில் வைத்திருந்தன. ஆனால் அப்படி ஒரு அவசியம் இல்லை. ஒரு கட்சியை தலைமை தாங்குவதற்கு ஒருவர் சட்டத்தரணியாகவோ அல்லது பட்டதாரியாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் தம் சார்ந்த மக்களின் குறைகளை, பிரச்சனைகளை எடுத்துக்கூறும் வல்லமையும் பொதுச்சேவை, நேர்மை, வெளிப்படை போன்ற தன்மைகளும் உடையவராய் இருத்தலே முக்கியமாகும். பெருந்தலைவர் காமராஜர்,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜனாதிபதி பிரேமதாச போன்றோர் பெரிதாக பள்ளிப்படிப்பு படிக்கவில்லை ஆனால் பெரிய கட்சிகளுக்கு தலைமைதாங்கி அரசாட்சிகளையும் நடத்தியுள்ளார்கள். படித்தால் மட்டும் போதாது. இன்று சில அரசியல்வாதிகள் தம்மை படித்தவர்கள் என்று வரிக்கு வரி கூறிக்கொண்டு மிகவும் பண்பாடற்ற முறையில் பேசிக்கொண்டும் செயல்பட்டுக்கொண்டும் திரிகிறார்கள். அவர்களது நடவடிக்கைகள் தமிழர்களது அரசியல் பலத்தை மேலும் வலுவிழக்கவே செய்கின்றன.

ஆகவே இன்று பல்வேறு பிரச்சனைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் ஒன்றினைந்து தமிழர்களுக்கான ஏகோபித்த கட்சி ஒன்றை உருவாக்க முன்வர வேண்டும். இப்படியான ஒரு கட்சியை உருவாக்குவதற்கான பொறிமுறை இங்கே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதைப் படிப்பவர்கள், இதில் நம்பிக்கை ஏற்படின் செய்ய வேண்டியது தத்தம் கிராம சேவகர் பிரிவுகளில்  குறைந்தது 30-100 பேர் கொண்ட கட்சிக் கிளையை அமைத்து அதில் இருவரை தமது பிரதேச கிளை பிரதிநிதிகளாக தெரிவு செய்வது மட்டுமே. இதை படிக்கும் புலம் பெயர்ந்தவர்கள் இதில் நம்பிக்கை ஏற்படின் தத்தம் பூர்வீக கிராமங்களில் கிராமக் கிளைகளை அமைக்க அங்குள்ள மக்களை ஊக்குவிக்கலாம்.

வழக்கமாக அரசியல் கட்சிகள் அவற்றிற்கு தலைமை தாங்க இருப்பவர்களாலேயே ஆரம்பிக்கப்பட்டு அதன்பின் அதற்கு ஆதரவான தொண்டர்கள் பிரசாரத்தின் மூலம் சேற்கப்படுவர். ஆனால் இது ஒரு அரசியல் புரட்சி. இந்த புரட்சியை எப்படி முன்னெடுக்கலாம் என்பதற்கான பொறிமுறை இந்த வலைத்தளம் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இந்த பொறிமுறையின்படி கட்சிக்கு தொண்டர்கள்தான் முதலில் தம்மை தாமே சேர்த்துக் கொள்வார்கள். பின்னர் அவர்களே கட்டம் கட்டமாக (கிராமம், பிரதேசம், மாவட்டம், மத்தியம்) தலைமைப் பீடத்தை தெரிவு செய்வார்கள். இக்கட்சிக்கு கொள்கைகளும் அடிப்படை உறுப்பினர்களுமே நிரந்தரம். செயற்குழுக்களும், தலைமைப்பீடமும்  காலத்துக்கு காலம் (ஒவ்வொரு 5 வருடம்) அடிப்படை உறுப்பினர்களால் கட்டம் கட்டமாக தெரிவு செய்யப்பட வேண்டும்.